Test

தபால் தலை: ஒரு வரலாற்றுச் சித்திரம்

N Hariharan retd Postmaster First Meghdoot awardee in Tamilnadu 1984 Award winner for 6 suggestions in DOP. 





தபால் தலை: ஒரு வரலாற்றுச் சித்திரம்

தொடக்கத்தில் தபால் தலைகளைக் கடிதங்களின் மீது ஒட்டி அனுப்பும் முறை இல்லை. தபால்களைக் கொண்டு செல்வோர் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் சேர்ப்பிக்கும் தூரத்தைக் கணக்கிட்டு கட்டணத்தை வசூல் செய்யும் முறை வெகு காலமாக இருந்தது.

மௌரியர் (கி.மு.321&297) ஆட்சியில் புறாக்களின் மூலம் தபால் அனுப்பும் முறை துவங்கியது. இது அசோகர் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது. கி.பி.1541ல் குதிரைதபால் சேவை பெங்கால், சிந்து மாகாணங்களுக்கு இடையே 2 ஆயிரம் மைல் தூரத்துக்கு நடைபெறத் துவங்கியது. டாக் டோங்கா (தபால் சாரட் வண்டி) 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் தபால் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் கடிதங்களை ஒட்டி அனுப்பும் முறையைப் பின்பற்றியதாக பெரிஷ்டா என்ற யாத்ரீகர் குறிப்பிட்டு உள்ளார்.

1639ம் ஆண்டு மெட்ராஸிலும் (சென்னை) பின்னர் பம்பாயிலும் (மும்பை) 1688ம் ஆண்டு கல்கத்தாவிலும் (கோல்கத்தா) கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கடிதப்போக்குவரத்தை அக்கம்பெனியே நிர்வகித்து செயல்பட ராபர்ட் கிளைவ் 1766-ல் அதற்கென சில நிரந்தரமான ஏற்பாடுகளைச் செய்தார். இருப்பினும் தூரத்தையும் எடையையும் கணக்கிட்டே தபால் கட்டணத்தை வசூலித்து வந்தனர்.

தாமிர ரசீது: 1744ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் தபால் கட்டணத்துக்கு தாமிர ரசீதுகளை அறிமுகப்படுத்தினார். 1814ம் ஆண்டு சர்தீனியன் நாட்டு தபால் துறை தபால்களின் பட்டுவாடா தூரத்தைக் கணக்கிட்டு, 15, 25, 50 சென்ட் மதிப்புள்ள தபால் ஸ்டாம்ப் பேப்பரை அறிமுகப்படுத்தியது.

உலகின் முதல் தபால் துறை கி.மு.558ல் பெர்சியா நாட்டில் தொடங்கப்பட்டது.-

இந்தியாவில் ஒவ்வொரு சமஸ்தானமும் பல்வேறு முறையான தபால் போக்குவரத்தைக் கையாண்டு வந்தன. உலகம் முழுவதும் பல்வேறு தபால் சேவைகள் நடைமுறையில் இருந்தன. இத்தனை சேவைகளிலும் தபால் கட்டணம் வசூலிப்பதில் ஆங்காங்கே சில குறைபாடுகளும் முறைகேடுகளும் நடந்து வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இங்கிலாந்து நாட்டு ஆங்கிலப் பள்ளித்தலைமை ஆசிரியர் சர் ரவுலண்ட் ஹில் (1795-1879). அவர் 1854ம் ஆண்டு தபால் அலுவலகங்களில் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அவர் அளித்ததில், தபால் தலையை அறிமுகப்படுத்தும் முறை மிக முக்கியமானது.

தபால் தந்தை:

அவரது தீவிர முயற்சியால் உலகின் முதல் தபால் தலை, 1.5.1840ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு, 6.5.1840 முதல் தபால்களில் ஒட்டி அனுப்பும் முறை துவங்கியது. சர் ரவுலண்ட் ஹில் தபால் தந்தை என்று கௌரிக்கப்பட்டார். விக்டோரியா ராணியின் உருவம் கொண்ட கறுப்புநிற ஒரு பென்னி மதிப்புடைய தபால் தலைதான் உலகின் முதல் தபால் தலை. அதை பென்னி ப்ளாக் என்று அழைத்தார்கள். அந்த ஆண்டு முடிவுக்குள் (1840), 17 கோடி கடிதங்கள் தபால் தலைகள் ஒட்டி அனுப்பப்பட்டன என்பது வரவேற்பு மிக்க செய்தியாக இருந்தது. இவ்வாறு உருவான தபால் தலை பின்னர் உலகம் முழுவதும் பரவி பல நாடுகள் தங்களுக்கென தபால் தலைகளைப் போட்டி போட்டு வெளியிடத் தொடங்கின.

ஆசியாவில் 1852 ஜூலை 1ம் தேதி பார்ட்லே பெர்ரி என்ற சிந்து மாகாண கமிஷனர், முதல் தபால் தலையை அறிமுகப்படுத்தினார். இத்தபால் தலைகள் சிந்த் டாக்ஸ் என்று அழைக்கப்பட்டன. இதுவே இந்தியாவின் முதல் தபால் தலையும் கூட.

நம் நாட்டிலேயே முதல் தபால் தலைகள் அரையணா, ஓரணா, இரண்டணா மற்றும் நான்கணா மதிப்புகளில் அச்சிடப்பட்டு 1.10.1854ல் வெளியிடப்பட்டன. கல்கத்தாவில் உள்ள சர்வேயர் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள அச்சுப்பிரிவில் அ அவை லித்தோ கிராபிக் முறையில் அச்சிடப்பட்டன. முதல் இந்திய தபால் தலைகளை வெளியிட்டவர். இந்திய துணை சர்வேயர் ஜெனரல் கேப்டன் சர்.எச்.எல்.துல்லியர்.

1856 முதல் 1926வரை இந்திய தபால் தலைகள், லண்டனில் உள்ள தாமஸ் டி லா ரியூ என்ற நிறுவனத்தில் அச்சடிக்கப்பட்டன. இந்திய அரசுக்குச் சொந்தமான நாசிக்கில் 1926ம் ஆண்டு முதல் தபால் தலைகள் அச்சிடப்பட்டு வந்தன.

காந்திக்கு கௌரவம்:

சுதந்திர இந்தியாவில் அச்சிடப்பட்ட தபால் தலைகளில் முதலில் இடம்பெற்றவர் மகாத்மா காந்தி. தபால் தலைகளில் தேசத் தந்தை மகாத்மா காந்தி இடம்பெற்றது. அவரது மறைவுக்குப் பின்னர்தான். அவரது நினைவாக 15.8.1948ல் ஒன்றரை அணா, மூன்றரை அணா, பனிரெண்டனா மற்றும் பத்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகளை இந்திய அரசு வெளியிட்டது-. நேருவின் யோசனைப்படி காந்தியின் முதல் தபால் தலைகளில் பாபு (BAPU) என்ற பெயர் ஹிந்தியிலும் உருதிலும் சேர்க்கப்பட்டது. வேறு எந்த இந்தியத்தபால் தலைகளிலும் உருது இடம் பெறவில்லை. காந்தியைக் கௌரவித்து தபால் தலைகளை வெளியிட்ட முதல் வெளிநாடு அமெரிக்கா (26.1.1961) உலகிலேயே மிக அதிக நாடுகளால் தபால்தலைகள் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டவரும் மகாத்மாகாந்தியே.

காந்திக்கு அடுத்தபடியாக தபால் தலைகளில் கவிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்றவர்கள் மட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் கூட தபால் தலைகள் வெளிவரத் தொடங்கின. அரசியல் கலாச்சாரம், வன உயிரினம் நதிகள், அணைகள், சிகரங்கள், சினிமா விளையாட்டு சாதனைகள் கண்டுபிடிப்புகள் எனப்பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தபால் தலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சிறப்புத்தபால் தலைகள் முக்கோண வடிவமாகவும் சதுரம் செவ்வகம் நீள்சதுரம் போன்ற பல அளவுகளில் வெளியிடப்படுகின்றன.

வந்தே மாதரம் ஜன கண மன போன்ற தேசிய கீதங்கள் முழங்கி, சுதந்திர இந்தியாவுக்காக மிகப்பெரும் பங்கில் தன்னை ஈடுபடுத்திய கோல்கத்தா நகரமும் தபால் தலையால் கௌரவிக்கப்பட்டது.

திருவள்ளுவன் தமிழ்நாட்டுப் புலவர்கள் வரிசையில் முதன் முதலில் இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான் (15.2.1960) அதே ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவாகவும் தபால் தலை வெளியிடப்பட்டது.

இவ்வாறாக தபால் தலைகள் வழக்கத்தில் இல்லாத நிலை முற்றிலும் மாறி, தபால் தலைகள் புழக்கத்திற்கு பயன்படத் தொடங்கிய போது, வெறும் தபாலுக்காக மட்டுமில்லாது வெவ்வேறு சிறப்புக்காகவும் அவ்வப்போது சிறப்புத் தபால் தலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவை சேகரிக்கவும் பயன்படுகின்றன. தபால் தலைகளில் இடம்பெறுவது இப்போது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. தபால் தலைகளில் இடம்பெறுவோர் பல அரிய தியாகங்களையும் சாதனைகளையும் படைத்துள்ளவர்களாக இருப்பது மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது இளம் வயதிலேயே (28) தாய்நாட்டுக்காக உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்குத் தபால் தலை வெளியிட 72 ஆண்டுகளாயிற்று சிறப்புத்தபால் தலைகள் குறிப்பிட்ட அளவே அச்சடிக்கப்படுகின்றன. அதனால் அவற்றைச் சேகரிப்பதால் பிற்காலத்தில் அவை அரிய விலை மதிப்புள்ள பொருளாகிவிடுகின்றன.

தபால் தலைகளில் வெளிவராத விஷயங்களே இல்லை எனலாம். தபால் தலைகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையக்கூடியது. தபால் தலைகளை ஒரு நாட்டின் ஜன்னல் என்றும் வரலாற்றுச்சித்திரம் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.



(கட்டுரையாளர், தேசிய விருது பெற்ற முன்னாள் போஸ்ட்மாஸ்டர்)


Post a Comment

0 Comments